மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பெரும் பண மோசடி: வருமான வரித்துறை ‘ரெய்டு’

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் பெரும் பண மோசடி மற்றும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நகர்ப்புற கூட்டுறவு கடன் வங்கியின் தலைமையகம் மற்றும் கிளை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வங்கியின் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களில் ஒருவரின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.

கோர் பேங்கிங் சொல்யூஷன்ஸ் (சிபிஎஸ்) குறித்த வங்கித் தரவுகளின் ஆய்வு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட முக்கிய நபர்களின் வாக்குமூலங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

பான் எண் இல்லாமல் 1200-க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் இந்த கிளையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகள் கேஒய்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொடங்கப்பட்டவை என்பதும், கணக்கு துவக்கப் படிவங்கள் அனைத்தும் வங்கி ஊழியர்களால் நிரப்பப்பட்டு, அவர்களின் கையொப்பம்/கட்டைவிரல் பதிவை இட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்குகளில் பலமுறை ரூ 1.9 லட்சம் என மொத்தம் ரூ 53.71 கோடி செலுத்தப்பட்டிருந்தது. 700-க்கும் அதிகமான தொடர் வங்கிக் கணக்குகளில் அவை தொடங்கப்பட்ட 7 தினங்களுக்குள் ரூ 34.10 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. ரூ 2 லட்சத்திற்கும் அதிகமாக செலுத்தினால் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் இந்த பணம் அதே கிளையில் வைப்புத் தொகைகளாக மாற்றப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட கணக்குதாரர்களில் சிலரை விசாரித்த போது, இந்த நபர்கள் வங்கியில் உள்ள பண வைப்புகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.

ஆதாரம் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் ரூ 53.72 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE