ஷாருக்கான் மும்பை இல்லத்தில் ஆவணங்கள் தயாரித்த என்சிபி அதிகாரிகள்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கானின் மும்பை இல்லத்தில் ஆர்யன் கான் வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் நேற்று தயாரித்தனர்.

கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் மறுத்துவிட்டது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானை, ஷாருக் கான் நேற்று சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்புக்கு அடுத்த சில மணி நேரத்தில் ஷாருக்கான் வீட்டுக்கு என்சிபி அதிகாரிகள் சென்றனர். ஆர்யன் கான் மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர்கள் தயார் செய்தனர். ஷாருக்கான் வீட்டில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை, ஆவணப் பணிகளை முடிப்பதற்காகவே என்சிபி குழு சென்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷாருக் கான் வீட்டில் என்சிபி அதிகாரிகள் இருந்த அதே நேரத்தில், என்சிபியின் மற்றொரு குழு நடிகை அனன்யா பாண்டே வீட்டில் சோதனை நடத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE