உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டு 4 பேர் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் லவ் குஷ், ஆஷிஸ் பாண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 பேர் கொண்ட போலீஸ் படை லக்கிம்பூர் சம்பவம் குறித்து விசாரிக்கிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று லக்கிம்பூர் கேரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராடினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவங்களில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அமர்வு, உ.பி. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் “ லக்கிம்பூர் கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும். 8 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டம்தான். உயிரிழந்த 8 பேரும் யார், அவர்கள் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். யார் மீதெல்லாம் முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவியுங்கள்” எனத் தெரிவித்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டு 4 பேர் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.