லக்கிம்பூர் கலவர பதற்றத்தை தணிக்க அதிகாலை வரை ஆலோசனை நடத்திய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கலவர பதற்றத்தை தணிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அதிகாலை 5.30 மணி வரை ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

உத்தர பிரதேசம், லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் கடந்த 3-ம் தேதி விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள், 4 பாஜகவினர், ஒரு செய்தியாளர் என 9 பேர் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அதிவிரைவாக நடவடிக்கை எடுத்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் முகாமிட்டிருந்தார். அன்றிரவு கோரக்நாத் கோயிலில் முதல்வர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து திங்கள்கிழமை காலை பேராச் நகருக்கு ஹெலிகாப்டரில் அவர் செல்ல இருந்தார்.

இந்தப் பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு கோரக்பூரில் இருந்து ஞாயிறு இரவு 8 மணிக்கு லக்னோவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் திரும்பினார். கடந்த இரு நாட்களாக லக்கிம்பூர் பிரச்சினையில் மட்டும் அவர் கவனம் செலுத்தினார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி வரை மூத்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். அவரேநேரடியாக களத்தில் இறங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதால் கலவரம் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக உத்தர பிரதேச போலீஸ் ஏடிஜி பிரசாந்த் குமார் கூறியதாவது:

விவசாயிகளுக்கும் மாநில அரசுக்கும் இடையே எவ்வித பிரச்சினையும் கிடையாது. வேளாண் சட்ட பிரச்சினைக்கு தீர்வு காண உதவுமாறு மாநில அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக லக்கிம்பூர் கலவரம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறு கலவரம் மூண்டது, இதற்கு யார் காரணம் என்பது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

முதல்வரின் அறிவுரையின் பேரில் கலவரம் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம். விவசாய சங்கங்களின் தலைவர்கள் லக்கிம்பூர் செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன.

எனினும் அரசியல் தலைவர்கள் லக்கிம்பூருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக வன்முறையை தடுக்க முடிந்தது. கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு பிரசாந்த் குமார் தெரிவித்தார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE