இந்திய விமானத்தில் ஏறுவதற்காக காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே காத்திருந்த 150 இந்தியர்களை தலிபான்களால் பிடித்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் 140 பேர் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
எனினும் ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா, அமெரிக்காவின் உதவியையும் நாடியது. காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் விமான நிலையம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காபூல் நகரில் சுமார் 400 இந்தியர்கள் வரை இன்னும் அங்கு சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை அதிரடி திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கத் தயார் நிலையில் இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது.
அங்குள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வரை வந்தால் மட்டும் போதும் அவர்களை தாயகம் அழைத்துவந்துவிடலாம் என அறிவிக்கப்பட்டு இந்தியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தயார் நிலையில் இருந்த விமானம் காபூலில் இருந்து இன்று காலை 85 இந்தியர்கள் மீட்டது. அடுத்த விமானம் தஜிகிஸ்தானில் இருந்து காபூல் நோக்கி செல்ல தயாராக உள்ளது. இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் யாரும் வெளியேற வேண்டாம் என வலியுறுத்தி வரும் தலிபான்கள் விமான நிலையம் நோக்கி வருபவர்களை விரட்டியடித்தனர்.
காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பம் நிலவுவதாகவும், அதிகமான இந்தியர்களை விமான நிலையத்திற்குள் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வந்ததை அறிந்து கொண்ட தலிபான்கள் விமான நிலையத்தின் வெளிப்பகுதியை சுற்றி வளைத்தனர். விமான நிலையம் அமெரிக்கப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வெளியில் கூடிய மக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டதாக தகவல் வெளியானது. அவர்களை கடத்திச் சென்று விட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனினும் இதனை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. ஆப்கன் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் காபூல் செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.