இந்தியா

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; இல்லையெனில் புறக்கணிப்பு: லாலு எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

சாதிவாரியான நடத்தவில்லை எனில், மக்கள்தொகை கணக்கெடுப்பு புறக்கணிக்கப்படும் என மத்திய அரசிற்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தப்பட மாட்டாது என மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பிஹாரின் எதிர்கட்சியான ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கருத்து கூறியுள்ளார். கால்நடைதீவன வழக்கில் தண்டனை அடைந்த லாலு, சமீபத்தில் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு தன் ட்விட்டரில் குறிப்பிடுகையில், ‘‘2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையும் சாதிவாரியாக நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இதன்மூலம், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் எண்ணிக்கை அறியப்படும். சாதிவாரியாக நடத்தப்படவில்லை எனில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பிஹார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கும் நிலை உருவாகும்,’’ எனத் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சனையில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை நேற்று லாலுவின் மகனும் எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் நேரில் சந்தித்தார். அவரிடம் மத்திய அரசு செய்யவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் சாதிவாரியானக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தன்னை பரோபகாரி என்றழைக்கும் பிரதமர் நரேந்தர மோடி சாதிவாரியான கணக்கெடுப்பிற்கு அஞ்சுவது ஏன்? எனவும் தேஜஸ்வீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வீ தன் ட்விட்டரில் பதிவிடுகையில், ‘‘இந்த கணக்கெடுப்பின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகும்.
அதில், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு குறிப்பிட்ட சாதியினரே எப்படி ஆட்சி செய்கிறது என்பது வெளியாகி விடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிஹாரின் மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகளும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தத் துவங்கி உள்ளன. பாஜவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் சாதிவாரியானக் கணக்கெடுப்பை கோரி வருகிறது.

இதன் மீது பிரதமர் நரேந்தர மோடிக்கு பிஹாரின் முதல்வர் நிதிஷ்குமார் விரிவானக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். ஒடிஸாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கும் சாதிவாரியானக் கணக்கெடுப்பிற்கு கோரியுள்ளார்.

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியும் சாதிவாரியானக் கணக்கெடுப்பிற்கு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. நேற்றுடன் முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜகவின் ஒரு பெண் எம்.பி.யும் இதற்காக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT