சுற்றுலா தலங்களில் கூட்டம் கூட வேண்டாம்: எய்ம்ஸ் தலைவர் அறிவுரை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:

இந்தியாவில் ஜைடஸ் கெடில்லா உள்ளிட்ட நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகள் விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கரோனாவில் இருந்து மீள முடியும்.

இப்போதைய நிலையில் கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை. இந்த சூழ்நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகுத்துவிடும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடுதலாக ஒரு தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பல்வேறு நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த சூழலில் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி போடுவது ஏற்புடையது கிடையாது. உலகம் முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலோரியா தெரிவித்தார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE