யஷ்வந்த்பூர் ரயில் நிலைய 6-வது பிளாட்பாரத்தில் உள்ள கலாமின் சிலை. 
இந்தியா

ஸ்கிராப் பொருட்களில் இருந்து வியக்க வைக்கும் கலாம் சிலை: பெங்களூரு ரயில்வே ஊழியர்கள் அசத்தல்

எஸ்.முஹம்மது ராஃபி

ஜூலை 27- குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 6-வது நினைவு தினம்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 27) நாடு முழுவதும் அனுசரிக்கும் நிலையில், ஸ்கிராப் பொருட்களில் இருந்து வியக்க வைக்கும் அப்துல் கலாம் சிலையை பெங்களூரு மாவட்ட ரயில்வே ஊழியர்கள் உருவாக்கி, அதனை யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்தில் நிறுவியுள்ளனர்.

''கனவு மலரட்டும்! கனவுகள்தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாகப் பரிணமிக்கின்றன'' என்று கூறிக் குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றிக் கனவு காண வைத்தவர் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

தமிழகத்தின் தென்கோடியாம் ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாய் 15.10.1931 அன்று பிறந்து, தனது கடின உழைப்பால் எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக் கோள் திட்டத்தின் இயக்குநராகப் பதவி உயர்ந்தார். பின்னர் திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.

2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரானார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் பதவிக் காலத்திற்குப் பின்னர் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். பின்பு 27.07.2015 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய நினைவகத்தைக் கடந்த 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு மாவட்டம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பொறியாளர்கள் ரயில்வேயின் பழைய நட்டு, போல்ட், மெட்டாலிக் ரோப் வயர் போன்ற பல்வேறு ஸ்கிராப் பொருட்களில் இருந்து, வியக்க வைக்கும் மார்பளவு அப்துல் கலாம் சிலையை உருவாக்கி, அதனை யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் நிறுவியுள்ளனர். இந்தச் சிலையைத் தயாரிக்க 40 நாட்கள் ஆகியுள்ளன. இதன் உயரம் 7.8 அடியாகும். சிலை 800 கிலோ எடை கொண்டது.

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சிலையின் படங்கள் பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT