உயிரிழந்த முதியவரிடம் இருந்து எடுத்து 23 கி.மீ. தூரத்தை 22 நிமிடத்தில் கடந்து பிஎஸ்எப் காவலருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை: விரைந்து செல்ல உதவிய டெல்லி கிரீன் காரிடார்

டெல்லியில் பிஎஸ்எப் வீரருக்கு பொருத்துவதற்காக 23 கி.மீ. தூரத்தை 22 நிமிடத்தில் கல்லீரலுடன் டாக்டர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதற்கு பசுமை சாலைதான் உதவியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) காவலர் (47) ஒருவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு, ‘லிவர் கோமா’ நிலைக்கு சென்றார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றுதான் வழி என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற் காக கல்லீரலுக்குப் பதிவு செய்து விட்டு காத்திருந்தார்.

இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 70 வயது முதியவர் ஒருவர் மூளை சாவு அடைந்தார். அவரது கல்லீரலை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் இருந்துபிஎல்கே மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கல்லீரல் கொண்டு செல்லப்பட்டு பிஎஸ்எப் வீரருக்கு டாக்டர்கள் பொருத்தி உள்ளனர்.

இதுகுறித்து பிஎல்கே மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவு தலைவருமான டாக்டர் அபிதீப் சவுத்ரி நேற்று கூறியதாவது:

பிஎஸ்எப் காவலர் கடந்த மே மாதம் பிஎல்கே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. அவரது குடும்ப உறுப்பினர்களின் கல்லீரல் அவருக்கு பொருந்தவில்லை. இதையடுத்து கல்லீரல்தானத்துக்காகக் காத்திருந்தார். தெற்கு டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் கல்லீரலை தானம் தர அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்த தகவல் கிடைத்தது.

உடனடியாக எங்கள் மருத்துவமனையை சேர்ந்த ஒரு டாக்டர்கள் குழுவினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றொரு குழுவினர் பிஎல்கே மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளில் இறங்கினர். தெற்கு டெல்லியில் இருந்து பிஎல்கே மருத்துவமனை 23 கி.மீ. தூரம் உள்ளது. கல்லீரலை விரைவாக எடுத்து வர போலீஸாரின் உதவியை நாடினோம். அவர்களும் டெல்லி கிரீன் காரிடார் சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தி தயார் நிலையில் இருந்தனர்.

தெற்கு டெல்லி மருத்துவமனையில் எங்கள் டாக்டர்கள் குழுவினர் இரண்டரை மணி நேரத்தில் முதியவரின் உடலில் இருந்து கல்லீரலை பத்திரமாக எடுத்தனர். பின்னர் ஆம்புலன்சில் கிரீன் காரிடார் சாலை வழியாக 22 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்தனர். போலீஸாரின் உதவியால் 23 கி.மீ. தூரத்தில் இருந்து வெறும் 22 நிமிடத்தில் கல்லீரல் விரைவாக வந்து சேர்ந்தது.

அதன்பின், பிஎஸ்எப் காவலருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை 7 மணி நேரம் நடைபெற்றது. இந்த சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் காவலர் புது வாழ்வு பெற்றுள்ளார். முதியவரை இழந்து சோகத்தில் இருந்தாலும், உறுப்பு தானத்துக்குமுன்வந்த அவரது குடும்பத்தாருக்கு எங்கள் டாக்டர்கள் குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உறுப்பு தானம் என்பது பலருடைய உயிரைக் காப்பாற்றக் கூடியது. கல்லீரலை விரைந்து கொண்டு வர உதவிய போலீஸார் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித் துக் கொள்கிறோம். இவ்வாறு அபிதீப் சவுத்ரி கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE