இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.
17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் 20அமர்வுகளை ஆகஸ்ட் 13-ம் தேதிவரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 17 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதில் 3 மசோதாக்கள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுகின்றன.
கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்தார். உள்ளே செல்லும் முன்பு நாடாளுமன்றத்தின் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். காலையில் பலத்த மழை பெய்ததால் அவர் குடையை பிடித்தவாறு பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் தேவை. கரோனா பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
கரோனாவை வெல்ல அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியின் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
கரோனாவை எதிர்கொள்ள (பாகு) என்கிறது தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது. எனவே கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டால் பாகுபலியாக மாறலாம். இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு, பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர்.
இவ்வாறு மோடி கூறினார்.