இந்தியா

ராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை? - ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்களே விலை வைக்கவும் அனுமதித்தது.

இதன்படி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே மாதியான விலை இருக்க வேண்டும், 5 விதமான விலை இருக்கக்கூடாது, மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியது. இதனையடுத்து நாடுமுழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

எனினும் கரோனா தடு்ப்பூசி விலை விவரம், பற்றாக்குறை போன்ற விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அவருக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவில்லை. நீங்கள் இன்னமும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ளவும். இதனை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT