பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

கரோனாவில் இருந்து மீண்டவர்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: மருந்து கையிருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

மியூகோர்மைகோசிஸ் நோயைக் கட்டுப்படுத்த அம்ஃபோடெரிசின் பி மருந்தின் இருப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையில் மிகவும் மோசமான நிலையின்போது அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது.

இதனால் கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோயின் சிகிச்சையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அம்ஃபோடெரிசின் பி என்ற மருந்தின் தேவை ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

எனவே இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அதன் தயாரிப்பாளர்களுடன் இந்திய அரசு இணைந்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட மருந்தின் இறக்குமதியை அதிகரித்து, உள்நாட்டில் அதன் உற்பத்தியை பெருக்குவதன் வாயிலாக அதன் விநியோகத்தை உயர்த்த முடியும்.

இந்த மருந்தின் இருப்பு மற்றும் தேவை தொடர்பாக உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு, மே 10 முதல் 31-ஆம் தேதி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மே 11-ஆம் தேதி, மருந்தகத் துறை, அம்ஃபோடெரிசின் பி மருந்தை ஒதுக்கியது.

அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார முகமைகளுக்கு இந்த மருந்தை சமமாக விநியோகிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டிலிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்தை பெறுவதற்கான 'தொடர்பு புள்ளி'குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளவைகளை நேர்மையான முறையில் பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்துகளின் விநியோக நடவடிக்கைகளை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணிக்கும். பெருந்தொற்றினால் நாட்டின் பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய கோவிட் மருந்துகளின் விநியோகத்தை அதிகரிக்கவும், சமமான மற்றும் வெளிப்படையான முறையில் அவற்றை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு விநியோகிப்பதற்கும், இந்திய அரசு தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT