மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே முன்னுரிமை அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசிபோடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை 59 கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட 122 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.
தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும். வரும் ஆகஸ்டில் மாதத்துக்கு 1.6 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.
மேலும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.