தலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் ‘குலா’ முறை செல்லும்: கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

இஸ்லாமியர்களிடையே தன் மனைவியை விவாகரத்து செய்ய தலாக் எனும் விவாகரத்து முறையை கணவர் பின்பற்றுகிறார். இதன் எதிர்மறையாக, தன் கணவரை விவாகரத்து செய்ய முஸ்லிம் பெண்களுக்கான ‘குலா’முறை சட்டப்படி செல்லும் எனகேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியின் சம்மதம் இல்லாமலே முஸ்லிம் கணவர் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்வதற்கு தலாக் என்று பெயர். எனினும், இந்த தலாக்கை வாபஸ் பெறச் செய்ய வேண்டி இருதரப்பினரும் அவர்களது நகரக் காஜியின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிகபட்சமாக மூன்று முறை நடைபெறும் இப்பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் இருவரும் நிரந்தரமாகப் பிரிய வேண்டிஇருக்கும். இதைத்தான் ஒரே சமயத்தில் சிலர் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வதை மத்திய அரசு சட்டம் இயற்றி தடை செய்தது.

இதேபோல், பெண்ணுக்கும் இஸ்லாத்தில் ஒருதலைப்பட்சமாக தன் கணவரை விவாகரத்து செய்ய முழு உரிமை உள்ளது. தலாக்கை போலான இந்த முறைக்கு ‘குலா’ என்று பெயர். பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை விவாகரத்து செய்வது மிகவும் குறைவு. இதனால், இந்த குலா முறை பற்றி முஸ்லிம்களிடையே கூட அதிகம் தெரியாமல் உள்ளது.

இந்நிலையில், கேரளாவின் 31 வயது முஸ்லிம் பெண் தன் 41 வயது கணவரை குலா முறையில் விவாகரத்து செய்துள்ளார். இதை ஏற்காத அவரது கணவர், பெண்களுக்கு தலாக்கை போல்ஒருதலைப்பட்சமாக விவாகரத்துஅளிக்க உரிமை இல்லை என மறுத்துள்ளார். இதற்காக கல்பேட்டாவின் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பெண் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதேபோல் கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவேறு சிலருக்கும் வந்த பிரச்சினையால் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஏப்ரல் 9-ல் குலா முறை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதிகளான முகம்மது முஸ்தாக், சி.எஸ்.டயாஸ் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘இஸ்லாமியர்கள் இடையேகணவன், மனைவி இருவருக்குமே ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை உள்ளது. இதற்கான குறிப்பு அவர்களது மதத்தின் புனித நூலான குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் பெண்களின் குலா முறை செல்லும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த குலா முறையில் விவாகரத்து பெறும் மனைவி, தான் திருமணத்தின்போது கணவரிடம் பெற்ற ‘மெஹர்’ எனும் ரொக்கத்தை திருப்பி அளித்து விட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை அந்த மனைவி தரத் தவறினால் அதற்காக அவரது கணவர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்கலாம் எனவும் யோசனை கூறியுள்ளது.

72-ல் அளித்த தீர்ப்பு செல்லாது

இதுபோன்ற ஒரு வழக்கில் கடந்த 1972-ம் ஆண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி தீர்ப்பு வெளியாகி இருந்தது. அதில் நீதிமன்றத்திற்கு வெளியே முஸ்லிம்களில் கணவருக்கு உள்ளது போல் மனைவிக்கு விவாகரத்து செய்ய உரிமை இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது வெளியான உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பால் 1972-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்றாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

மேலும்