நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் வழங்கும் பணி கடந்த 13-ம் தேதி (பிப்.,13) முதல் தொடங்கியது. அன்றைய தினம் 10-ல் ஒருவர் என்ற வீதத்தில் 23,628 சுகாதார முன்களப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கரோனா தடுப்பூசிப் பணியை பிரதமர் மோடி நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கு 6 வார இடைவெளியில் 2 டோஸ்களாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இரண்டாம் டோஸ் வழங்கும் பணி 14 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் நேற்று முன் தினம் பிப்ரவரி 13-ல் தொடங்கியது.
தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்ட நாளில் 2,07,229 பேர் அதனைப் பெற்றுக் கொண்டதாக சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பில் உள்ளது. அப்படியென்றால், பிப்ரவரி 13-ல் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட நாளிலும் அதே அளவிலான மக்கள் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிப்ரவரி 13 அன்று 10-ல் ஒருவர் என்ற வீதத்தில் 23,628 சுகாதார முன்களப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.
பிற நாடுகளில் தடுப்பூசி தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசிகள் தேங்கியுள்ளன. பிப்ரவரி 14ம் தேதி வரை 8.24 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே முதல் தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.37 லட்சம் என்றளவில் குறைந்துள்ளது. புதிதாக தொற்று ஏற்படுவோரில் 10-ல் 8 பேர் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
கேரளாவின் நேற்று (பிப்.14) கரோனா பாதிப்பு 5,471 ஆக இருந்தது. தினசரி கரோனா பாதிப்பில், நாட்டிலேயே கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3,611 பேருக்கும், தமிழ்நாட்டில் 477 பேருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது.