டெல்லியில் வேளாண் சட்டங்கள் அமலாவதாக அறிவிப்பு: கேஜ்ரிவால் மீது அகாலிதளம் குற்றச்சாட்டு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளின் எதிர்ப்புச் சட்டங்களை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளதை அறிந்து நானும் விவசாயிகளும் அதிர்ச்சியடைந்துள்ளோம். விவசாயிகள் மீது அவர் காட்டும் அனுதாபம் போலியானது என்று சிரோன்மணி அகாலிதளம் விமர்சித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகளால் நடத்தப்படும் டெல்லி சலோ போராட்டம் 8-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்ததின் மூலம் கேஜ்ரிவால், விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டதாக சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்க சந்தைப்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மூன்று சட்டங்களில் ஒன்றை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் மீது டெல்லி முதல்வர் காட்டியது உண்மையான அனுதாபம் என்றுதான் நாம் நினைத்தோம். ஆனால், அது உண்மையானதல்ல. விவசாயிகள் மீதான கேஜ்ரிவாலின் அனுதாபம் போலியானது.

புதிய வேளாண் சட்டங்களை கேஜ்ரிவால் டெல்லியில் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது தீவிர அரசியல் நேர்மையின்மை மட்டுமல்ல, எளிய இதயமுள்ள மற்றும் நம்பிக்கைக்குரிய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற துரோகமும் ஆகும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளின் எதிர்ப்புச் சட்டங்களை கேஜ்ரிவால் அமல்படுத்த உள்ளதை அறிந்து நானும் விவசாயிகளும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது தொடர்பாக டெல்லி அரசு ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலை கூட கேஜ்ரிவாலிடமிருந்து போலிக் கண்ணீரை எவ்வாறு சிந்துவது என்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில், முதலைக் கண்ணீர் என்று கூறிவரும் போக்கை இனி 'கேஜ்ரிவால் கண்ணீர்' என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்".

இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE