நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் தமிழகத்தில் பேரிடர் மீட்புக்குழுவின் 12 பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பலத்த புயல் காற்று அடிக்கும், பலத்த மழையும் தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழவின் தலைவர் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரிடர் மீட்புக்குழுவின் 12 பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 3 குழுவும், காரைக்காலில் ஒருக்குழுவும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 3 குழுவும் பணியமர்த்தப்பட்டுள்ளன.’’ எனக் கூறினார்.