பெங்களூரு தீவிரவாதிகளின் புகலிடம் என்று கூறிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மீது குமாரசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
பெங்களூரு ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் மையம்’ என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியதற்கு முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக எம்.பியின் கருத்து பெங்களூரை அவமானப்படுத்துவதாகும், இந்நகரம் தீவிரவாதிகளின் புகலிடம் அல்ல என்றார் குமாரசாமி.
“சிலர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர், இவர்கள் டி.ஜெ.ஹல்லி சம்பவத்துக்குப் பிறகே பிடிபட்டனர். இவர்களுக்கு எதிராகத்தான் நம் விமர்சனம் இருக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்த பெங்களூரு மக்களையுமா சொல்வது.
பெங்களூரு தீவிரவாதிகளின் புகலிடமே, அது நம்முடையது. பெங்களூரு நம் பெருமை” என்று அவர் கன்னட மொழியில் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் முகநூலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு பதிவை பகிர இதனையடுத்து கடும் வன்முறை மூண்டது. இது நடந்த இடம் டிஜே ஹல்லி. இதைத்தான் குமாரசாமி குறிப்பிட்டார்.
மேலும் குமாரசாமி கூறும்போது, “பாஜகவில் உள்ள சிலர் பெங்களூருவை பயங்கரவாத மையம் என்று கூறுவது பெரிய இழிவாகும். இந்த கூற்றை முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் நியாயப்படுத்த திணறியதைப் பார்த்தேன்.
இது மூத்த பாஜக தலைவர்கள் மீதே அவதூறு செய்வதாகும்” என்றார்.
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் ஜேபி.நட்டா செய்த நிர்வாக மட்ட மாற்றங்களில் பாஜக இளையோர் பிரிவு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். வந்தவுடனேயே பயங்கரவாதம் அது இது என்று இவர் பேச மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெங்களூருவில் என்.ஐ.ஏ கிளை ஒன்றை திறக்க அனுமதி அளித்தார்.
சூர்யாவை பதவிநீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியது.