மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 117 வயது மூதாட்டியை மிகவும் வயதான வரி செலுத்தும் பெண் என வருமான வரித்துறை கவுரவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறையின் மத்தியபிரதேச மற்றும் சத்தீஸ்கர் மண்டல தலைமை ஆணையர் ஏ.கே.சவுகான் நேற்று கூறும்போது, “வருமான வரித் துறையின் 160-வது தினத்தை முன்னிட்டு, வரி செலுத்துவோரில் 100 வயதைக் கடந்தவர்களை கவுரவித்துள்ளோம். இதன்படி மத்திய பிரதேசத்தின் பீனா கிராமத்தைச் சேர்ந்த 117 வயதான கிரிஜா பாய் திவாரி மிகவும் வயதான வரி செலுத்தும் பெண் என கவுரவித்துள்ளோம்.
1903-ம் ஆண்டில் பிறந்த இவர், வைப்புத் தொகை மீதான வட்டி மற்றும் ஓய்வூதியத்தை தனது வருமானமாக காட்டி உள்ளார். இதன் மூலம் இவர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார். இதுபோல, ம.பி.யின் இந்தூரைச் சேர்ந்த ஈஸ்வரிபாய் லுல்லா (103), சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரைச் சேர்ந்த பீனா ரக்சித் (100), இந்தூரைச் சேர்ந்த காஞ்சன் பாய் (100) ஆகியோரையும் கவுரவித்துள்ளோம். இவர்கள் அனைவருமே பெண்கள் ஆவர்” என்றார்.