கர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கடந்த ஜூன்23-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞரின் தாய், தந்தையுடன் 96 வயது பாட்டி கோவிந்தம்மாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோவிந்தம்மா உள்ளிட்ட நால்வரும் சித்ரதுர்கா அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன், 28 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கோவிந்தம்மா கரோனா நோயிலிருந்து நேற்று பூரண குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

அப்போது கோவிந்தம்மா கூறும்போது, “என்னுடைய அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் கரோனா நோயை வென்றுள்ளேன். நம்முடைய மனசுவலிமையாக இருந்தால் கரோனாவில் இருந்து மீண்டு விடலாம். எனக்குநல்ல சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கும் நல்ல முறையில் கவனித்துக்கொண்ட செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

கடந்த மாதம் பெங்களூருவில் 99 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE