கேரளாவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் இன்று அதிகம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் இருந்த 202 நோயாளிகள் இன்று நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ‘நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் வந்தது இன்றுதான்!’ என்று சுகாதார அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’’மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 57 பேரும், பாலக்காடு மாவட்டத்தில் 53 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 23 பேரும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 15 பேரும், கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 14 பேரும், இடுக்கி மாவட்டத்தில் 13 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து 11 பேரும், திருச்சூர் மாவட்டத்தில் 8 பேரும், ஆலப்புழா மாவட்டத்தில் 7 பேரும், கோட்டயம் மாவட்டத்தில் ஒருவரும் கரோனா வைரஸால் இன்று குணப்படுத்தப்பட்டவர்கள். இதுவரை, 2,638 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் 2,088 நோயாளிகள் இந்த நோய்க்கான சிகிச்சையில் உள்ளனர்.

இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 106 பேர் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -27, குவைத் -21, ஓமன் -21, கத்தார் -16, சவுதி அரேபியா -15, பஹ்ரைன் -4, மால்டோவா -1, ஐவரி கோஸ்ட் -1). பிற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 40 பேர் (டெல்லி -13, மகாராஷ்டிரா -10, தமிழ்நாடு -8, கர்நாடகா -6, பஞ்சாப் -1, குஜராத் -1, மேற்கு வங்கம் -1). 14 பேர் உள்ளூரில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் (ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா 4 பேரும், கோட்டயம் மாவட்டத்தில் ஒருவரும் உள்ளூர்த் தொடர்பு மூலம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்).

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 1,78,099 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 1,75,111 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்காணிப்பில் உள்ளனர் மற்றும் 2,988 பேர் மருத்துவமனைகளில் தனிமையில் உள்ளனர். 18,790 நபர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 403 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,589 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மொத்தம் 2,46,799 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 4,722 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதார ஊழியர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உயர் சமூகத் தொடர்புகள் உள்ளவர்கள் மற்றும் முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 52,316 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அதில் 50,002 மாதிரிகளுக்கு நோய்த்தொற்று இல்லை என முடிவு கிடைத்துள்ளது.

இன்று, மூன்று புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன, மூன்று இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 123 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE