உ.பி. காசியாபாத் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தவறாக நடந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீது வழக்கு: முதல்வர் ஆதித்யநாத் எச்சரிக்கை

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உத்தரப் பிரதேசம் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடந்தும், மதிப்புக்குறைவாகவும் பேசியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கலாம் என்று மருத்துவ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்களின் பட்டியலைத் தயார் செய்து மாநிலம் வாரியாகத் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்திலும் இதேபோல தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்கள் பட்டியலைத் தயார் செய்து ஏராளமானோரைப் பிடித்து மருத்துவமனைகளில் சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் பலர் காசியாபாத் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காசியாபாத் எம் எம்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் அவதூறாகப் பேசுவதும், பாடுவதும், அரைநிர்வாணக் கோலத்தில் நடமாடுவதாக மருத்துவர்கள் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளருக்குப் புகார் தெரிவித்தனர். மேலும் சிகிசைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் தாக்கியதாகப் புகாரில் தெரிவித்தனர்.

இந்தப் புகாரை தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமை மருத்துவ அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இதுகுறித்து காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி நிருபர்களிடம் கூறுகையில், “மருத்துவத் தலைமை அதிகாரியிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. உதவி ஆட்சியர் ஷைலேந்திர சிங், போலீஸ் ஆணையர் மணிஷ் மிஸ்ரா இருவரும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தினர்.

கோட்வாலி காவல் நிலையத்தின் சார்பி்ல தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி பிரிவு 354, 294, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி் அதன்பின் வழக்குப்பதிவு செய்தனர்” எனத் தெரவித்தார்.

இதற்கிடையே தலைமை காவல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் சேர்ந்ந்து தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் செவிலியர்களிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்தது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவுக்கும் கீழ்படிய மறுக்கிறார்கள். சட்டத்தையும் மதிக்கவில்லை. பெண் செவிலியர்களிடம் தவறாக நடந்தது ஏற்க முடியாதது. அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறோம். யாரையும் விடமாட்டோம்” எனத் தெரிவி்த்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE