இந்தியா

‘‘காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது’’- ஜோதிராதித்ய சிந்தியா

செய்திப்பிரிவு

காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது என்பதால் அக்கட்சியில் இருந்து பதவி விலகிறேன் என ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர். அவர்கள் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவி விலகச் செய்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்தது.

இதற்கு ஏதுவாக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிருப்தியில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராவத் தெரிவித்தார். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் சமரசம் ஏற்படும் என தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழலில் ஜோதிராதித்ய சந்தியா வீட்டில் இருந்து கிளம்பினார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் ஜோதிராதித்ய சந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இதனால் ம.பி. காங்கிரஸ் அரசு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT