கரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் விமான நிலையங்களுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலகளாவிய விமான நிலையங்களின் குழு திங்களன்று தெரிவித்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகள் கரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை ரத்து செய்து வருகின்றன. இதனால் விமான நிலையங்களுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்படலாம் என விமான நிலையங்களுக்கான சர்வதேச கவுன்சில் (ஏசிஐ) அச்சம் தெரிவித்துள்ளது.
ஏசிஐ என்பது சர்வதேச அளவில் இயங்கி வரும் விமான நிலையங்களின் குழுவாகும். இது 668 உறுப்பினர்களுக்குச் சேவை செய்கிறது. 176 நாடுகளில் 1,979 விமான நிலையங்களை இயக்குகிறது.
விமான நிலையங்களில் வருவாய் இழப்பு ஏற்படுவது குறித்து கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கரோனா வைரஸ் பாதிப்பினால் ஆசிய-பசிபிக் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கோவிட்-19 பிரச்சினை தவிர்த்து திட்டமிடப்பட்ட போக்குவரத்து நிலைகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் முதல் காலாண்டில் பயணிகளின் போக்குவரத்து அளவு 24 சதவீதம் குறைந்துள்ளது,
இதனால் நீண்ட காலகாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும் விமான நிலையங்களுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் ஆசியா பசிபிக் உள்ளூர் விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் அரசாங்கமும் சூழல்களுக்கு ஏற்ப நன்கு வரையறுக்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2019 -2020 ஆம் ஆண்டிற்கான ஏசிஐ உலக விமான நிலையப் போக்குவரத்துக் கணிப்புகளின்படி ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கம்போல் வணிகம் செய்யும் சூழ்நிலையில், முதல் காலாண்டில் 12.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கும். அதேநேரம் கோவிட்-19ன் தாக்கம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்குள், பிரதான நிலப்பகுதிகளான சீனா, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர். மற்றும் கொரிய குடியரசு ஆகியவை போக்குவரத்து அளவுகளில் கணிசமான இழப்புகள் ஏற்படும். ஏனெனில், இவை கரோனா விளைவுகளின் மையத்தில் உள்ளன.
இதற்கிடையில், மத்தியக் கிழக்கில் பல நாடுகளில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கான தங்களது திட்டங்கள் மூலம் இருக்கை சலுகைகளை வழங்கினாலும் இதனால் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் போக்குவரத்தை 4.2 சதவீதம் எதிர்மறையாக பாதிக்கவே செய்யும்.
இந்த இருண்ட பின்னணியில் போக்குவரத்து மற்றும் பயணிகள் பயணத்தின் துல்லியமான சரிவினால், விமான நிலையங்களின் வானூர்தி வருவாய் மற்றும் ஏரோநாட்டிகல் அல்லாத வருவாய் ஆகியவற்றிலும் இதேபோன்ற சரிவை ஏற்படும்''.
இவ்வாறு ஏசிஐ தெரிவித்துள்ளது.