ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வெட்டுக்கிளிகளுடன் சென்ற பாஜக எம்எல்ஏ

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ ஒருவர் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் அடங்கிய பையுடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நோக்கா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏவான பிகாரி லால் என்பவர் நேற்று சட்டப்பேரவைக்குள் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை நிறைய வெட்டுக்கிளிகளுடன் சென்றார்.

இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற எம்எல்ஏக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, அவைக் காவலர்கள் அவரை பேரவை அரங்கிலிருந்து வெளியேற்றினர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் பிகாரி லால் கூறியதாவது:

மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் லட்சக்கணக்கிலான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த விவசாயப் பயிர்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்திவிட்டன. இதனால், விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல், குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதிலேயே தீவிரமாக உள்ளது.

எனவே, அரசுக்கு இந்த விவகாரம் குறித்து நினைவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வெட்டுக்கிளிகளுடன் பேரவைக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE