தருண் கோகோயின் ராஜினாமா முடிவை நிராகரித்தார் சோனியா காந்தி

அசாம் முதல்வர் தருண் கோகோயின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டார்.

அசாமின் 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தருண் கோகோய் (78) முன்வந்தார். 2001 முதல் மாநிலத்தின் முதல்வராக இருந்து அவர் நிருபர்களிடம் முன்னர் பேசியபோது, ஒரு வாரத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின் வெளியே வந்த கோகோயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் நிருபர்களுக்கு பதில் அளிக்காமல் கோகோய் காரில் ஏறி சென்றுவிட்டார்.

அவரது சார்பில் அசாம் மாநில வேளாண் அமைச்சர் அன்ஜன் தத்தா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

தோல்விக்குப் பொறுப்பேற்று தருண் கோகோய் முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். அவரது ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE