சுனந்தா வழக்கில் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை: டெல்லி போலீஸ் கமிஷனர்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை மேற்கொள்ளப்படும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளும். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருடன் சசி தரூர் நட்பு பாராட்டியது சுனந்தாவுக்கு அதிருப்தி அளித்துள்ளது என்பது தெரிந்ததே. எனவே, சசி தரூர் - மெஹர் தரார் நட்பு, நெருக்கம் குறித்தும் விசாரிக்கப்படும். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசி தரூர் டெல்லி திரும்பியுள்ளது தெரியும். எனவே ஓரிரு நாட்களில் விசாரணை தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

சுனந்தா உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட நச்சின் மாதிரியை வெளிநாட்டு ஆய்வுக்கூடத்திற்கு இன்னும் அனுப்பவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் முடிந்தவுடன் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த வழக்குக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, போலீஸ் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளும் என்றார்.

விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இன்னும் ஓரிரு நாட்களில் உங்களை மீண்டும் சந்திப்பேன். அப்போது இந்த வழக்கு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். அதனை எடுத்துரைப்பேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE