காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம்: பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் வன்முறை யாளர்களை கலைக்க பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படையினரை கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் காஷ்மீர் இளைஞர் களும் கல்வீச்சு தாக்குதலில் ஈடு படுவதை அறவே நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாதி புர்ஹான் வானி கொல்லப் பட்ட நாள் முதலாக ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக 45 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர். இதனால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் பல்வேறு மாவட் டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ஆராய்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் நகர் சென்றடைந்தார். அங்குள்ள நேரு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியினரை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தார். அத்துடன் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பிற அரசியல் தலைவர்களை சந்தித்தும் அமைதிக்கான நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த உயர்நிலை கூட்டத்தில் மாநில முதல்வர் மெகபூபா முப்தி, மூத்த அமைச்சர்கள், போலீஸ் உயரதி காரிகள், மத்திய உளவு அமைப் பினர், துணை ராணுவப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபர் களின் (பாகிஸ்தான்) தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை. தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஆயுதம் ஏந்தும்படி காஷ்மீர் இளைஞர்களை தவறாக தூண்டி விடுகிறீர்கள். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே காஷ்மீர் இளைஞர்களும் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு படையினரும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட அனந்த்நாக் மாவட்டத்துக்கு நேரில் சென்று ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். பின்னர் நேற்று மாலை விமானம் மூலம் அவர் டெல்லி திரும்பினார்.

அடிப்படை பிரச்சினை என்ன?

ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரம் பணம் சம்பந்தப்பட்டது அல்ல. சிறப்பு நிதிகளை வழங்கு வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களாலும் அமைதியை ஏற்படுத்த முடியாது. அரசியல்தான் இங்கு அடிப்படையான பிரச்சினை. அதை ஏற்றுக்கொள்ளும்வரை தீர்வு காண முடியாது என உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

ஊரடங்கு நீட்டிப்பு

இதற்கிடையில் தெற்கு காஷ்மீரில் பதற்றம் தணியாத காரணத்தினால் அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், குல்ஹாம், குப்வாரா, புல்வாமா, சோபியான் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் 8 போலீஸ் நிலை யத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இன்று கண்டன பேரணி

இந்த சூழலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று கண்டன பேரணி நடத்துவதற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பேரணியை தடுத்து நிறுத்த அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE