எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கை ஓராண்டில் விசாரிக்க உத்தரவு

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை கீழ்நிலை நீதிமன்றங்கள் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கீழ்நிலை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதாக குற்றம்சாட்டி தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை கீழ்நிலை நீதிமன்றங்கள் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். ஒருவேளை ஓராண்டுக்கு மேல் விசாரணை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமை நீதிபதிக்கு திருப்தி ஏற்பட்டால் அவர் காலஅவகாசத்தை நீட்டிக்கலாம்.

நீண்டகாலமாக வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவியில் நீடித்து ஆட்சி, அதிகாரத்தை அனுபவிக்கக்கூடும். எனவே விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குற்றவியல் வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதியிழப்பர் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. அதன்படி கால்நடைத் தீவன வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதேபோல் மருத்துவக் கல்லூரி சேர்க்கை முறைகேடு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் மசூத்தின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE