இந்தியா-வங்கதேசம் இடையே 20-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்திய-வங்கதேச இருதரப்பு உறவுகளை நெருக்கமானதாக்கும் வகையில் சனிக்கிழமையான இன்று சுமார் 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அகியோர் நடத்திய ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் சமூகப் பயன்களுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் வங்கதேசத்தில் திட்டங்களைச் செயல்படுத்த 4.5 பில்லியன் டாலர்கள் கடனுதவியையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தவிர ராணுவ உதவியாக 500 மில்லியன் டாலர்கள் கூடுதலாக வழங்கவும் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டீஸ்டா நீர்ப்பங்கீடு ஒப்பந்தம்...

இவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் இருநாடுகளுக்கும் முக்கியமான டீஸ்டா நீர்ப்பங்கீடு ஒப்பந்தம் மட்டும் இரு தரப்பினருக்கும் இன்னமும் கைகூடாமல் போயுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி அழுந்தக்கூறிய பிரதமர் மோடி இத்திட்டத்திற்காக தனது உறுதியை அளித்துள்ளார். ‘விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்’ என்றார்.

பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போதே 2011-ம் ஆண்டு டீஸ்டா ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் கடைசி நிமிடத்தில் இந்த ஒப்பந்தம் தள்ளிவைக்கப்பட்டது.

டீஸ்டா நீர் பங்கீட்டு ஒப்பந்தம் வங்கதேசத்துக்கு மிகவும் முக்கியமானது காரணம், டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் நீரின் அளவு 5000 கன அடியிலிருந்து 1000 கன அடியாகக் குறைந்து விடும்.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் நீங்கலாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE