மோடி அலை உண்மையென்றால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரை ஏன் அழைக்க வேண்டும்? - உத்தவ் தாக்கரே கேள்வி

மோடி அலை வீசுவது உண்மையென்றால் அவரை பாஜக-வினர் மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேச அழைத்திருக்க மாட்டார்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி கூட்டங்களில் பேச பாஜக அழைத்திருப்பது பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, “வரவிருக்கும் மராட்டிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நிறைய பொதுக்கூட்டங்களில் மோடி பேசுகிறார் என்ற ரீதியில் நிறைய அறிவிப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது, மோடிக்கு எதிராக நான் பேசவில்லை. ஆனால் ‘மோடி அலை வீசுகிறது’ என்பது உண்மையானால் அவரை அழைத்துப் பொதுக்கூட்டங்களில் பேச வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக ஒரு நாட்டின் பிரதமர் பொதுக்கூட்டங்களில் பேசுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி நான் இப்போது கூற முடியாது, ஆனால் மோடி அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அவருடன் விவாதித்து இறுதி முடிவெடுப்போம்” என்று மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே சிவசேனா அமைச்சர் ராஜினாமா விவகாரம் குறித்து அவர் கூறினார்.

மகாராஷ்டிரா மாநில கட்சி விவகாரங்கள் பொறுப்பில் இருக்கும் ராஜிவ் பிரதாப் ரூடி கடந்த செவ்வாயன்று கூறும்போது, “மோடி மராட்டியத்தில் 22 முதல் 24 தேர்தல் கூட்டங்களில் பேசுவார் என்று கூறியிருந்தார்.

அதனை விமர்சித்தே உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE