மரண தண்டனையை ஆயுளாக குறைக்க ராஜீவ் கொலையாளிகள் கோரிக்கை

By ஜா.வெங்கடேசன்

ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

தங்களது கருணை மனுக்களை பரிசீலித்து முடிவு எடுப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணை மனுக்கள் மீது பரிசீலனை செய்து முடிவு எடுக்காமல் எந்த விளக்கமும் இன்றி இழுத்தடிப்பதை முகாந்திரமாக கொண்டு மரண தண்டனையை ஆயுளாக குறைக்கலாம் என ஜனவரி 21-ம் தேதி வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட தூக்கு தண்டனை கைதிகளின் மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பின் பலனை எங்களுக்கு நீட்டித்து மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி வெள்ளிக்கிழமை கூறியதாவது: ‘கருணை மனு கிடப்பில் இருந்த நிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு பல நினைவூட்டு கடிதங்களை முருகன் அனுப்பினார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகும் கருணை மனு

மீது முடிவு எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேல் தாமதமானது. இத்தகைய நியாயமற்ற தாமதத்துக்கு விளக்கம் இல்லை என்பதே உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நான் வைத்த வாதம்’ என்றார்.செய்திக்கு மறுப்பு

இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் மரண தண்டனைக்குத் தகுதியானவர்களே என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக சில பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் வழக்கறிஞர் யுக் சௌத்ரி.

இந்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபிக்கிறீர்களா என்றுதான் தலைமை நீதிபதி ப.சதாசிவம் என்னிடம் வினவினார்.

‘கருணை மனுக்கள் மீது கவனம் செலுத்தாமல் மனம் போன போக்கில் குடியரசுத் தலைவர் செயல்பட்டது பற்றியும் அந்த மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் பற்றியுமே எனது கேள்வி’ என்று நான் பதில் சொன்னேன் என்றார் சௌத்ரி.

கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் குடியரசுத் தலைவர் மனம் செலுத்தவில்லை. இதர குற்றவாளிகளின் கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டபோது ஏன் இவற்றில் தாமதம்?.

ஜனவரி 21-ம் தேதி தீர்ப்பு அடிப்படையில் ஆயுள் தண்டனை கோருவதுதான் எங்கள் மனுவின் நோக்கம் என்கிறபோது, இந்த

குற்றவாளிகள் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் பிப்ரவரி 4ம் தேதி வாதம் தொடர்கிறது. அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜராகி தமது வாதத்தை முன்வைப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE