தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க முடியாது: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திட்டவட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினமும் நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவின் முக்கிய அரசியல் கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கர்நாடக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடா டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது. காவிரி நீர் விவகாரத்தை கண்காணிக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் எக்காரணம் கொண்டும் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட கூடாது. தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது. காவிரி நீர் கர்நாடகாவுக்குச் சொந்தமானது என்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது''என வலியுறுத்தினார்.

பாஜக புறக்கணிப்பு

கர்நாடகாவின் எதிர்க்கட்சி யான பாஜக அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கர்நாடக‌ காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா, “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு கன்னட மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. கர்நாடக அரசு இவ்வழக்கை முறையாக கையாளவில்லை. எனவேதான் கர்நாடகாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ளது. சித்தராமையா கடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜகவின் கருத்தை ஏற்கவில்லை. தனது தோல்வியை மறைக்க சித்தராமையா மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதன்மூலமாக கர்நாடக மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. மத்திய அமைச்சர்களான சதானந்த கவுடா, அனந்தகுமார் மற்றும் மூத்த தலைவர்களையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறேன். கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லாத போது தமிழகத்துக்கு எப்படி நீரை வழங்க முடியும்? ''என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜேட்லி கருத்து

இதனிடையே டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில‌ விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும்''என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE