இந்தியா

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் இழப்பீட்டை ஓட்டுநரே செலுத்த வேண்டும் :விரைவில் அமலுக்கு வருகிறது புதிய சட்டம்

செய்திப்பிரிவு

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், அதில் பலியாகும் அல்லது காயமடையும் நபருக்கான முழு இழப்பீட்டையும் ஓட்டுநரே செலுத்த வகை செய்யும் புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

யாரேனும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலோ அல்லது காயமடைந்தாலோ, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் (எம்ஏசிடி) முறையிடுவது வழக்கம். இந்த மனுவை விசாரித்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் சார்பில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனத் துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடுவது வழக்கம்.

இந்நிலையில், சாலை விபத்து களைத் தடுப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதன்படி, குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால், அதில் பலியாகும் அல்லது காயமடை யும் நபருக்கான முழு இழப்பீட்டை யும் ஓட்டுநரே செலுத்த வேண்டியி ருக்கும். இதுபோன்ற சூழலில் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீட்டை செலுத்தத் தேவையிருக்காது.

எனினும், குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது, மரணம் விளைவிக்கும் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்படவில்லை. இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை போக்குவரத்து அமைச்சகம் ஏற்றுக் கொண்டாலும், இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதால் உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது.

இழப்பீடு குறையும்

இதனிடையே, இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப் படுவோருக்கான இழப்பீடு குறையும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த சிந்தனையாளர் எஸ்.பி.சிங் கூறும்போது, “குற்றம்சாட்டப்படும் ஓட்டுநரின் வருமானம் மற்றும் அவரது நிதி நிலையைப் பொறுத்துதான் இழப்பீடு நிர்ணயிக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் காப்பீடு நிறுவனங்கள் மறைமுகமாக பயன்பெறும். இந்நிலையில் அரசு ஏன் இத்தகைய முடிவை எடுத்தது என்று தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT