காங்கிரஸ் தோல்வி: ராகுலுக்கு எதிரான தீர்ப்பு அல்ல - திக்விஜய் சிங்

By செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரானதல்ல.

இந்த தேர்தல் ஒன்றும் ராகுல் காந்தி தொடர்பாக எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பு இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.

இது தொடர்பாக திக்விஜய் சிங், பி.டி.ஐ. செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரானதல்ல. இந்த தேர்தல் ஒன்றும் ராகுல் காந்தி தொடர்பாக எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பு இல்லை. காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் தலைமை வகிக்கவில்லை.

மாநிலத்தில் நிலவிய உள்ளூர் பிரச்சினைகளின் அடிப்படை யிலேயே இந்த தேர்தல் நடந்தது. தேசிய அளவிலான பிரச்சினைகள் இத்தேர்தலில் விவாதிக்கப்பட வில்லை.

காங்கிரஸ் சார்பில் முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரை அறிவித்திருந்தால் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பது அவசியம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

காங்கிரஸ் தலைமையும், கட்சியினரும் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டனர். அதன் விளைவாகத்தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் வெளிப்படையான, நியாயமான தேர்தல் நடைமுறையை பின்பற்ற வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சோனியா காந்தி அண்மையில் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளது, முன்கூட்டியே பிரதமர், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்ற காங்கிரஸின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திக்விஜய் சிங், “2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போதே பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் என்று அறிவித்திருந்தோம்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக சோனியா காந்தி முடிவு செய்வார். என்னைப் பொறுத்தவரை முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

மாநில சட்டமன்றத் தேர்தல்க ளில் காங்கிரஸ் அடைந்த தோல்வி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது.

இந்த தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசியதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது அந்தந்த மாநில ஆளுமைகளின் செல்வாக்கின் அடிப்படையில் நடை பெற்ற தேர்தலாகும். சத்தீஸ்கரில் ரமண் சிங், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, டெல்லியில் ஹர்ஷ்வர்தன் ஆகியோரை மையப்படுத்தியே தேர்தல் பிரச்சாரம் இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதற்கான பாராட்டுகள் அனைத்தும் அவர்களுக்குத்தான் சேரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

52 secs ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்