அமெரிக்காவின் நடவடிக்கை வருத்தத்துக்குரியது: பிரதமர் கருத்து

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை வருத்தத்துக்குரியது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன் கிழமை) நாடாளுமன்றத்திற்கு வெளியில் குழுமியிருந்த செய்தியாளர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய போது இதனை தெரிவித்தார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் தேவயானி மீதான நடவடிக்கையை கண்டித்த மத்திய அரசு இவ்விவகாரத்தில் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்திய துணை தூதர் தேவயானியை தாயகம் திருப்பி அழைத்த வருவேன், அப்படி அது முடியாவிட்டால் இனி நாடாளுமன்றத்திற்கு திரும்ப மாட்டேன் என்றார். மேலும், தேவயானியை இவ்விவகாரத்தில் சிக்க வைப்பதில் சதி நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE