பலாத்கார வழக்கில் மத்திய அமைச்சரின் மகனை கைது செய்யாதது ஏன்?- கன்னட நடிகை மைத்ரி சரமாரி கேள்வி

பாலியல் பலாத்கார வழக்கில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவை இன்னும் கைது செய்யாதது ஏன்? காவல் துறையும், நீதித் துறையும் அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றனவா என்று புகார் அளித்த நடிகை மைத்ரி கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னட திரைப்பட‌ நடிகை மைத்ரி கவுடா, சதானந்த கவுடா வின் மகன் கார்த்திக் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தார். பின்னர் ஏமாற்றி விட்டார் என கடந்த மாதம் 24-ம் தேதி பெங்களூர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கார்த்திக் மீது பாலியல் ப‌லாத்காரம், மோசடி, குற்றத்தை மறைக்க முயன்றது ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்திக் கவுடாவுக்கு போலீஸார் இருமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அதனால் பெங்களூர் மாநகர 8-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமை அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தது.

தலைமறைவு

கார்த்திக் கவுடா தலைமறைவாக இருந்துவரும் நிலையில், அவர் பெங்களூர் மாநகர 8-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மைத்ரியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனவே எனக்கு எதிரான கைது உத்தரவை ரத்துசெய்து, முன் ஜாமின் வழங்கவேண்டும்” என்று கோரியிருந்தார்.

இம்மனு சனிக்கிழமை மாலை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனு மீதான தீர்ப்பை திங்கள்கிழமை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

மைத்ரி பேட்டி

இந்நிலையில் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் மைத்ரி சனிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "இவ்வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. புகார் அளித்த என்னிடம் போலீஸார் இதுவரை 20 மணி நேரம் விசாரணை நடத்தியுள் ளனர். தொடர்ச்சியாக ஏற்பட்ட மன உளைச்சலினால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னிடம் இருந்த புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அனைத்தையும் போலீஸாரிடம் கொடுத்துவிட்டேன்.

கார்த்திக்கை இன்னும் கைது செய்யவில்லை. அவரது குடும்பத் தினரை ஒருமுறை கூட போலீஸார் விசாரிக்கவில்லை.

கொலைமிரட்டல்

இருமுறை சம்மன் அனுப்பி கூட அவர் போலீஸில் ஆஜராகாமல் தப்பிக்க முயற்சிக்கிறார். 3 தனிப்படையாலும் அவரை கைது செய்ய முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது நீதிமன்ற மும் கார்த்திக் ஜாமின் மனு மீது உடனடியாக தீர்ப்பளிக்காதது அதிர்ச்சியாக உள்ளது.

கார்த்திக் குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு தினமும் கொலை மிரட்டல் வருகிறது. எனவேதான் கார்த்திக் மற்றும் அவரது தாயார் தாத்தியுடன் பேசிய அனைத்து ஆடியோ பதிவுகளையும் ஊடகங்களில் வெளியிட்டேன். எனது காதல் உண்மையானது.பணத்திற்காக கார்த்திக் மீது இந்த புகாரை அளிக்கவில்லை. ஆனால் போலீஸாரும், நீதித்துறையும் அவரை காப்பாற்றுக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக் கிறது'' என்றார்.

இதனிடையே தனிப்படை போலீஸார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் பெங்களூர் மற்றும் மங்களூர் வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மைசூரில் உள்ள பண்ணை வீட்டி லும் போலீஸார் சோதனை நடத்தின‌ர்.

இந்த இடங்களில் கார்த்திக் இல்லாததால் அவரது தொலை பேசி எண்ணைக் கொண்டு தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE