கோரக்பூரில் பாஜகவுக்கு பின்னடைவு எதிரொலி: ஊடகவியலாளர்களுக்கு தடை

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லா முதலில் முன்னிலை பெற்று இருந்தார். எனினும் பின்னர் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சமான்வாதி வேட்பாளர் பிரவீண் குமார் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் யோகி ஆதித்யநாத் நீண்டகாலம் எம்.பியாக இருந்துள்ளார். இதனால் ஆளும் கட்சியான பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மையத்திற்கு வெளியே இருந்து வாக்கு எண்ணிக்கை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்கி வந்த ஊடகவியலாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்கள் அனைவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE