ராகுலுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்: நிர்மலா சீதாராமனை அவமதித்ததாகப் புகார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவமதித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக அரசாங்கத்தில் ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மக்களவையில் ரஃபேல் விவகாரத்தை பிரச்சினையாக்கிய ராகுல் காந்தி இதுகுறித்து கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு பாதுகாப்பு அமைச்சரும் விளக்கமளித்தார்.

அவ்விளக்கத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விமர்சனம் செய்தார்.

அதில், பிரதமர் ஓடிச் சென்று பெண்ணிடம், (நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு) சென்று தன்னைக் காப்பாற்றும்படி கேட்கிறார். அவர் எனது கேள்விகளுக்கு ஒரு மனிதனாக பதில் சொல்லவேண்டும் என்று பேசினார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம், இன்று (வியாழக்கிழமை) ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து மிகவும் தவறான கருத்து என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு தாங்கள் பேசியது வெறுப்பை ஏற்படுத்தும் மற்றும் மனதை புண்படுத்தும் கருத்து ஆகும்.

தங்களின் இக்கருத்து, வெறுப்பு, தாக்குதல் மட்டுமின்றி நியாயமற்றது ஆகும். மேலும் பெண்ணின் கண்ணியம் மற்றும் கவுரவம் மீது மரியாதை இன்மையையே இது காட்டுகிறது. பெண்களிடம் கண்ணியம் காக்கும் வகையில் தாங்கள் நடந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நோட்டீஸ்கள் அனுப்பினாலும், அத்துடன் சம்மன்கள் அனுப்பினாலும் எப்போதும் தேசிய கமிஷனின் தலைவரின் லெட்டர்ஹெட்டில்தான் அலுவலக பொறுப்பிலிருப்பவரின் கையெழுத்தோடு வரும். இக்கடிதத்திலும் சார் செயலாளர் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE