‘‘அமர்ந்தால் முதல்வர் பதவி’’ - விடாப்பிடியாக இருக்கும் சச்சின்; முடிவெடுப்பதில் தாமதம்

ராஜஸ்தான் முதல்வர் பதவி யாருக்கு என்பது குறித்து இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்களித்தபடி முதல்வர் பதவி வேண்டும் என சச்சின் பைலட் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. அங்கு முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இருவரும் இன்று காலை டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மேலிட பார்வையாளர் ஏ.கே. அந்தோணி சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் மூத்த தலைவர்கள் பலரும் அசோக் கெலாட்டு ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதுபோலவே நீண்ட அனுபவம் கொண்ட கெலாட்டை முதல்வர் பதவியில் அமர வைக்க சோனியா காந்தியும் விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சார சமயத்தில் முதல்வர் பதவி தொடர்பாக ராகுல் வாக்களித்தாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பிறகு தொண்டர்கள் துவண்ட நிலையில், மாநில தலைவர் பொறுப்பை ஏற்று, பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவு சுற்றுப்பயணம் செய்து சச்சின் பைலட் ஆதரவு திரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மாநில தலைவர் பதவியில் இருக்கும் சச்சின் பைலட்டை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்வர் பதவி குறித்து முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE