மாணவர்கள் வாட்ச் அணிந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதத் தடை: கர்நாடக அரசு அறிவிப்பு

10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள், கையில் வாட்ச் அணிந்துகொண்டு தேர்வு எழுதத் தடைவிதித்து கர்நாடக உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வரும் கல்வியாண்டு, அதாவது 2019-ம் ஆண்டு அரசுத்தேர்வில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைக்கடிகாரங்களை அணிந்து வந்து, முறைகேடான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ப்ளூடூத் பொருத்தப்பட்ட வாட்ச்சுகளை எளிதாக ஸ்மார்ட் போன் மூலம் லிங்க் செய்து அதன்மூலம் விடைகளைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் சில வாட்ச்சுகளில் மெமரி கார்டு வைக்கும் வசதி இருப்பதால், மெமரி கார்டில் ஏராளமான விடைகளைச் சேமித்து வைத்து அதன் மூலம் தேர்வு எழுதவும் மாணவர்களால் முடிகிறது. தேர்வுகளில் மாணவர்கள் பிட் அடிப்பதற்காகவே பெங்களூரு கடைகளில் ரூ.7 ஆயிரம் மதிப்பில் நவீன வாட்சுகள் விற்கப்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில்,  அதிரடியாக வாட்சுகளுக்கு தடை விதித்து தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கேஎஸ்இஇபி இயக்குநர் வி. சுமங்களா கூறுகையில், “தேர்வு மையத்தில் கண்டிப்பாக சுவர் கடிகாரம் பொருத்த வேண்டும் என்று அரசு தேர்வு நடக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் சுவர் கடிகாரம் இருப்பதைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு மூலம் மாணவர்கள் தனித்தனியாக கையில் வாட்ச் அணிய வேண்டிய அவசியமில்லை. தேர்வு மையத்திலேயே பொது கடிகாரம் மூலம் நேரத்தை பார்த்துக்கொள்ளலாம் “ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தேர்வு எழுத வரும் மாணவர்கள் கையில் டிஜிட்டல் வாட்ச் அணிந்து வருவதைத்தான் தடை செய்ய வேண்டும், மாறாக வழக்கமான வாட்ச்சுகளை அணிந்து வர அனுமதிக்கலாம் என்று ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு 10-ம் ஆண்டு தேர்வு எழுத உள்ள மாணவர் எஸ்.மகேஷ் கூறுகையில், “ அனைத்து மாணவர்களாலும் மிகவும் விலை உயர்ந்த வாட்ச்சுகளை வாங்கித் தேர்வில் முறைகேடான செயல்களில் ஈடுபட முடியாது. யாரோ ஒரு சில மாணவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக அனைத்து மாணவர்களும், நியாயமான மாணவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா? நேரத்தைப் பிரித்து தேர்வு எழுதக் கைக்கடிகாரம் கண்டிப்பாகத் தேவை” என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அரசு நிதிபெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி சசிகுமார் கூறுகையில், “ மாணவர்கள் தங்களின் தேர்வு நேரத்தைப் பிரித்துக்கொண்டு, தேர்வு எழுதவும், எந்தெந்தக் கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்றும் பிரிக்க கைக்கடிகாரம் அவசியம் தேவை. கைக்கடிகாரம் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, சில நேரங்களில் நேரத்தைக் கணக்கிட மறந்து மெதுவாகத் தேர்வு எழுதிவிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE