கேரளாவின் மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளில் மருத்துவமனைகள் நடத்தி வரும் டாக்டர் ஒருவர் ரூ.50 கோடி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வி.பி.எஸ்.ஹெல்த் கேர் என்ற பெயரில் 125க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நடத்தி வரும் டாக்டர் ஷாம்ஷெர் வயலில் ரூ.50 கோடி கொடுத்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி கடந்த 10 நாட்களில் 223க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் மீட்புப் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினர், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால், மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
குவைத் அரசு சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் அரசு சார்பில் இன்று ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லூலு குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் யூசுப் அலி ரூ.12.5 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தவரான டாக்டர் ஷாம்ஷெர் வயலில் கேரள மக்களின் நல்வாழ்வுக்காகவும், புனரமைப்புக்காகவும் ரூ.50 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து ஷாம்ஷெர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''கேரளாவுக்கு இது மிகவும் கடினமான நேரமாகும். கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக மாநிலத்தில் கனமழையும், வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மக்கள் தங்களின் ஒட்டுமொத்த வளங்களையும் பயன்படுத்தி இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கேரள மாநிலத்தில் பிறந்த நான் அவர்களுக்கு உதவ வேண்டியது முக்கியமாகும்.
அதனால், நான் கேரள மாநிலத்துக்கு ரூ.50 கோடி நிதியுதவி அளிக்க உள்ளேன். இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்தல், மருத்துவ வசதி, மற்றும் கல்வித்தேவைகளுக்காகப் பயன்படும். இந்த நிதியை நிர்வகிக்கச் சிறப்பு மிக்க வல்லுநர்கள் குழுவை நியமித்து செலவு செய்யப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் புனரமைப்பு செய்து, மீள் கட்டமைப்பு செய்வது, வீடுகளைக் கட்டிக்கொடுப்பது, பள்ளிக்கூடங்கள் அமைப்பது முக்கியப் பணியாக இருக்கும்.''
இவ்வாறு ஷாம்ஷெர் தெரிவித்தார்.
கடந்த 1977-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்த ஷாம்ஷெர் வயலில் பள்ளி, கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்தார். அதன்பின் மருத்தவப் படிப்பு முடித்து, அபுதாவியில் வி.பி.எஸ் மருத்துவமனையைத் தொடங்கினார். தற்போது இந்த விபிஎஸ். மருத்துவக் குழு மத்திய கிழக்கு நாடுகளில் பரந்து விரிந்து 22 கிளைகளாக உருவாகியுள்ளது. 125 மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது.
2018-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷாம்ஷெர் வயலில் பெயர் இடம் பெற்றுள்ளது. இவருக்குக் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு பிரவாசி பாரதிய விருது அளித்துக் கவுரவித்துள்ளது.