இந்தியா

கேரள நர்ஸ் ரஞ்சிதா முதல் மருத்துவ மாணவி வரை - அகமதாபாத் விமான விபத்து துயரம்

செய்திப்பிரிவு

பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக ரஞ்சிதா, லண்டனுக்கு மீண்டும் செல்ல முடிவு செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “லண்டன் வேலையை விட்டு விட்டு தென் கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லாட்டில் அவர் குடியேற முடிவு செய்திருந்தார். இதற்கா அங்கு புதிதாக வீடு கட்டவும் திட்டமிருந்தார். ஏராளமான கனவுகளுடன் இருந்தார். ஆனால், அவரே திரும்ப முடியாமல் போய்விட்டது. லண்டன் கிளம்பும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்" என்றார்.

லண்டன் சுற்றுலா செல்ல திட்டமிட்டசகோதரன் - சகோதரி: விடுமுறையை லண்டனில் கழிக்க திட்டமிட்ட, குஜராத்தைச் சேர்ந்த சகோதரன் - சகோதரி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் உதய்ப்பூரைச் சேர்ந்த மார்பிள் வியாபாரி சஞ்சீவ் மோடி. இவரது மகன் சுப் மோடி லண்டனில் பி.டெக். கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறார். மகள் சாகன் மோடி காந்தி நகரில் உள்ள கல்லூரியில் பிஏ-பிபிஏ படிக்கிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்கு லண்டனை சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தனர்.

இதனால் அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இவர்கள் பயணித்தனர். விமான விபத்து பற்றிய செய்தியை அறிந்ததும் இவர்களது பாட்டி, உறவினர் சதீஷ் பண்டாரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விபத்தில் சுப் மோடி மற்றும் சாகன் மோடி ஆகியோர் இறந்தது அவர்களது குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவி: பிரிட்டனில் படித்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவி தீபான்ஷி பதோரியாவும் இந்த விபத்தில் உயிரிழந்தார். குஜராத்தின் காந்தி நகரைச் சேர்ந்த அவர், தனது தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக லண்டனில் இருந்து கடந்த மாதம் வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்து நேற்று முன்தினம் லண்டன் புறப்பட்டபோது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தீபான்ஷியின் தந்தை, சிபிஐ-யில் பணிபுரிந்து வருகிறார்.

SCROLL FOR NEXT