பாட்னா: பிஹார் மாநிலம் புர்னியாவைச் சேர்ந்தவர் முகமது ரெஹான் பசல். இவர் ஐக்கிய ஜனதா தள கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் இவரை, ஆர்ஜேடி கட்சியின் பைசி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும், சையது ருக்நுதின் கடந்த வியாழக்கிழமை தாக்கியதாகத் தெரிகிறது. சட்டவிரோதமாக அவரைக் கடத்தி வைத்து அடித்து சையது ருக்நுதின் ஆட்கள் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரை சிறுநீர் குடிக்குமாறு பைசி தொகுதி எம்எல்ஏ சையது வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் முகமது ரெஹாசன் பசலுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புர்னியாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசல் சேர்க்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ சையது ருக்னுதீன் மீது பைசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, எம்எல்ஏ சையதுவிடம் கேட்டபோது இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.