சட்டவிரோத ஆயுதப் பயிற்சி வழக்கு; ‘சிமி’ அமைப்பின் 18 பேர் குற்றவாளிகள்: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோத ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டது தொடர்பான வழக்கில், இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தை (சிமி) சேர்ந்த 18 பேர் குற்றவாளிகள் என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 17 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வாஹேமான் பகுதியில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கேரளா மட்டுமின்றி கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சிமி அமைப்பினர் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட சில தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன்பேரில், அந்த அமைப்பைச் சேர்ந்த 35 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சதித்திட்டங்களை தீட்டுதல், ஆயுதச் சட்டத்தை மீறி செயல்படுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழக்கில் கைதாகியுள்ள 35 பேரில் 18 பேர் குற்றவாளிகள் என்று என்ஐஏ சிறப்பு நீதிபதி கவுசர் எடப்பாஹத் நேற்று தீர்ப்பு அளித்தார்.

மேலும், மீதமுள்ள 17 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சிகள் இல்லாததால், அவர்களை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 18 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE