2017-ல் ட்விட்டரில் மிகவும் ட்ரெண்ட் ஆன ‘மன் கி பாத்’

2017-ம் ஆண்டில் ட்விட்டரில் மிகவும் ‘ட்ரெண்ட்’ ஆன ஹேஷ்டேக்குகளில் ‘மன் கி பாத்’ முதலிடம் பிடித்துள்ளது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு ஹேஷ்டேக் இரண்டாமிடமும் ஜிஎஸ்டி ஹேஷ்டேக் மூன்றாமிடமும் பெற்றுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். மேலும், மன் கி பாத் நிகழ்ச்சியில் எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேசலாம் என்றும் மக்களிடம் கருத்துகள் கேட்டு உரையாற்றி வருகிறார். இதனை வானொலி, தூர்தர்ஷன் நேஷனல், தூர்தர்ஷன் நியூஸ் ஆகியவை ஒலிபரப்பு செய்கின்றன. இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆண்டு முழுவதும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் வைரல் ஆன சச்சின் டெண்டுல்கரின் கருத்தும் இதில் அடங்கும்.

இதையடுத்து தமிழகத்தில் 2017 தொடக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. 2017-ல் ட்விட்டரில் மிகவும் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்குகளில் இது இரண்டாமிடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை, நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய ஜிஎஸ்டி தொடர்பான ஹேஷ்டேக் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு ட்விட்டரில் மிகவும் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்குகளில் மும்பை கன மழை, முத்தலாக் விவகாரம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பணமதிப்பு நீக்கம், தூய்மை இந்தியா இயக்கம், உ.பி., குஜராத்தில் நடந்த தேர்தல் மற்றும் ஆதார் தொடர்பான ஹேஷ்டேக்குகளும் மிகவும் ட்ரெண்ட் ஆகியுள்ளன.- ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE