புதுடெல்லி: குஜராத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ரூ.209 கோடி செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தேர்தல் முடிந்தபின் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி குஜராத் தேர்தல் செலவின அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் பாஜக கடந்த ஜூலை 15-ம்தேதி தாக்கல் செய்தது. அதில்தேர்தல் பிரச்சாரத்துக்கும், வேட்பாளர்களுக்கும் ரூ.209.97 கோடி செலவு செய்ததாக பாஜக தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக சுமார் ரூ.41 கோடி வழங்கப்பட்டது என்றும், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உட்பட பயண செலவுகளுக்கு ரூ.15 கோடிக்கு மேல் செலவிட்டதாகவும், கட்சியின் பொது பிரச்சாரத்துக்கு ரூ.160.62 கோடி செலவு செய்ததாகவும் தனது அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.