அயல்நாட்டு நிறுவனங்கள், வங்கிக் கணக்குகள் தொடர்பான பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர் அடிபடுவதற்கு அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகள் சுயலாப நோக்கில் நடக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார். ஜெயந்த் சின்ஹா, ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தில் இந்தியாவில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த ஒமிட்யார் நிறுவனம் அமெரிக்காவின் டி-லைட் டிசைன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம் கேய்மன் தீவுகளில் துணை நிறுவனம் வைத்துள்ளது, இந்த விவரங்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் விசாரணையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நவம்பர் 6-ம் தேதி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தொடர் ட்வீட்களில் விளக்கம் அளித்துள்ளார்.
ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தின் ஒரு கூட்டாளியாகவும் நம்பிக்கைக்குரியவர் என்ற நிலையில் டி.லைட் நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வர்த்தக நடவடிக்கைகள் ஒமிட்யார் நிறுவனத்தின் பிரதிநிதியாக மேற்கொள்ளப்பட்டன, எந்த வித சொந்த நோக்கம் கருதியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியமானது, என்று மத்திய இணை அமைச்சரான ஜெயந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் முழுதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இதற்கான அவசியமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
“ஒமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு டி.லைட் நிறுவனத்தில் தனிப்பட்ட இயக்குநராக செயல்படுமாறு என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சரவையில் இணைந்தவுடன் நான் டி-லைட் பொறுப்பிலிருந்தும் விலகினேன். எனக்கும் அந்த நிறுவனத்துக்குமான உறவுகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டேன்” என்றார் ஜெயந்த் சின்ஹா.
முன்னதாக மத்திய நிதி இணையமைச்சராக ஜெயந்த் சின்ஹா இருந்தார்.
பன்னாட்டு புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்ப்புடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய அயல்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் பற்றிய விசாரணையே பாரடைஸ் பேப்பர்ஸ் ஆகும்.