ஓய்வூதியம் துறந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு கேரளாவில் பிச்சையெடுத்த ஆசிரியை மீட்பு: திருவனந்தபுரத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் புகார்கள் பதிவு

By என்.சுவாமிநாதன்

கேரளாவில் 33 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றியபோதும் ஓய்வூதியத்தை துறந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு பிச்சையெடுத்து வந்த மூதாட்டியை சமூக ஆர்வலர் ஒருவர் மீட்டுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வித்யா, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.டி.ஜலீலின் அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சராக உள்ளார். சமூக ஆர்வலரான விஜயா, ஒரு நாள் அலுவலகத்துக்கு செல்வதற்காக தம்பானூர் பேருந்து நிலையத்தில் தோழிக்காக காத்திருந்தார். அப்போது, அழுக்கு உடையணிந்த ஒரு மூதாட்டி 2 கிழிந்த பைகளுடன் கொய்யா மரத்தில் இருந்து காய்களை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

மூதாட்டியின் பசியை உணர்ந்த வித்யா, அருகில் சென்று ‘சாப்பிட ஏதாவது வேண்டுமா’ எனக் கேட்டுள்ளார். சுற்றும், முற்றும் பார்த்த மூதாட்டி ‘ஹோட்டல் அருகில் இல்லையே வேண்டாம்’ எனச் சொல்லியுள்ளார். வித்யா, ஒரு நிமிடம் இங்கேயே இருங்கள் என சொல்லி விட்டு, நான்கு இட்லியும் ஒரு வடையும் வாங்கி வந்து கொடுத்தார்.

அதில் இரண்டு இட்லி, வடையை சாப்பிட்ட அவர், மதியத்துக்கு இருக்கட்டும் என்றவாறே தனது அழுக்கேறிய கிழிந்த பைக்குள், மீதியிருந்த இரு இட்லியை வைத்துள்ளார். இதைப் பார்த்த வித்யா, இவ்வளவு யோசித்து செயல்படும் இவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரே என வேதனையோடு அவரை ஒரு புகைப்படம் எடுத்து, தனது முகநூலிலும் பதிவேற்றினார்.

ஆனால் அந்த ஒற்றைப் பதிவு எவ்வளவு பெரிய புரட்சியையே விதைக்கப் போகிறது என்பதை அப்போது வித்யாவும் அறிந்திருக்கவில்லை. ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை பகிர்ந்ததில், அந்த மூதாட்டி மலப்புரத்தில் உள்ள இஸ்லாஹியா பப்ளிக் பள்ளியில் கணித ஆசிரியையாக 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற வல்சலை அம்மாள் (63) எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் எடுத்த குழுப் புகைப்படத்தை (ஆசிரியையுடன்) வித்யாவுக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் “வல்சலை அம்மாளை நாங்கள் கவனித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே நாங்கள் வரும்வரை அவரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்” என அந்த மாணவர்கள் வித்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, அந்த மூதாட்டியை மீட்டு தம்பானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வித்யா. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் சார் ஆட்சியர் திவ்யா, வல்சலை அம்மாளை திருவனந்தபுரம் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.

மகன் கைவிட்டார்...

இதுகுறித்து வித்யா ‘தி இந்து’விடம் கூறும்போது, “வல்சலை அம்மாளின் கணவர் சோமசர்மா இறந்து விட்டார். ஆனால் உயிரோடு இருந்தபோது தனது கணவர் கொடுமைப்படுத்தியதால்தான் வல்சலை அம்மாள் அவரை பிரிந்துள்ளார். இவருக்கு சூர்ய சாயி என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரும் இவரை பராமரிப்பதில்லை. குற்றச்செயலில் ஈடுபட்ட சாயி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இப்போது பரோலில் வந்துள்ளார். அவர் வல்சலை தனது அம்மாவே இல்லை என்கிறார். ஆனால் அவர்தான் இந்த மூதாட்டியின் மகன் என பலரும் கூறுகிறார்கள். வல்சலை பணியிலிருந்தபோது மலப்புரத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்த இவரது வீட்டை, சகோதரி தங்கம்மாள் பெயருக்கு இவரது பெற்றோர் எழுதிக் கொடுத்து விட்டனர். அவர்களும் இவரை பராமரிக்கவில்லை.

இடையில்தான் இவருக்கு மனச்சிதைவு சிறிய அளவில் ஏற்பட்டுள்ளது. உயிரோடு இருப்பதற்கான வாழ்வு சான்று கொடுக்காததால் ஓய்வூதியமும் ரத்தாகிவிட்டது. 33 ஆண்டுகளாக, கணக்கு சொல்லிக் கொடுத்தவரின் வாழ்க்கை கணக்கு தவறாகி விட்டது. கணவர் இறந்ததும், மகன் இவரை அம்மாவே இல்லை என சொல்வதும்கூட அவருக்குத் தெரியவில்லை” என்றார்.

ஒரே மாதத்தில் 3 பேர் மீட்பு

இச்சம்பவம் குறித்து தெரிந்ததும் உடனடி நடவடிக்கை எடுத்தவர் திருவனந்தபுரம் சார் ஆட்சியர் திவ்யா. அவர் இதுகுறித்து கூறும்போது, “பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டத்தை மத்திய அரசு 2007-ல் இயற்றியது. 2009 முதல் அது கேரளாவில் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் அதுவும் தலைநகர் திருவனந்தபுரத்திலேயே பல முதியோர் பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்திலேயே ஆண்டுக்கு சுமார் ஆயிரம் புகார்கள் வருகின்றன. பிள்ளைகள் சொத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டுவது, வீட்டில் கொடுமை செய்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்த புகார்களைப் பொறுத்தவரை தண்டனை வாங்கிக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படமாட்டோம். தீர்வைத் தான் தேடுவோம். கடந்த ஆண்டு மட்டும் வீட்டில் இருந்து அடித்து துரத்தப்பட்ட 10 பேரை மீட்டுள்ளோம்.

வல்சலை அம்மாள் சம்பவம் சமூக வலைதளங்களில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு பிறகு மட்டுமே, பல இடங்களில் இருந்தும் தகவல்கள் வந்து 3 பேரை மீட்டுள்ளோம். வல்சலைக்கு மன ரீதியாகவும் சில பிரச்சினைகள் இருப்பதால் அதற்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது. அவரது மகன், அவரது சகோதரி உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

முதியோர் இல்லத்தில்...

இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் வல்சலை அம்மாளை சந்திக்க சென்றோம். அவருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார்கள். வந்திருப்பது ஆணா? பெண்ணா? என கேட்கவே, ஆண் என சொல்லியுள்ளனர். ஆண்களை பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். “என் புருசன் வருவாரு... என்னை கூப்புட ரயில்வேயில் வேலை செய்யும் என் மகன் வருவான். இனி நான் பார்க்கிற ஆம்பளைங்களா, இந்த இரண்டு பேருமாத்தான் இருக்கணும்” என மீண்டும் மீண்டும் சொல்கிறார் வல்சலை அம்மாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

18 mins ago

வலைஞர் பக்கம்

21 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

57 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்