மணிப்பூரில் நேரில் கண்ட நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தியிடம் நேற்று ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் விளக்கினர். படம்:பிடிஐ 
இந்தியா

மணிப்பூர் பயணம் குறித்து சோனியா காந்தி, கார்கேவிடம் எம்பிக்கள் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மணிப்பூர் கள நிலவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்த எம்பிக்கள் குழு விரிவான விளக்கம் அளித்தது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. இதை எதிர்த்து குகி, நாகா பழங்குடியினத்தவர்கள் கடந்த மே மாதம் 3-ம் தேதி தொடங்கிய கலவரம் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து, அந்த மாநிலத்தின் கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய 21 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் குழு இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றது.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களைக் கேட்டறிந்த எம்பிக்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி திரும்பியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் முன்னிலையில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது, காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை மோசமாக உள்ளது. நாட்டை காப்பாற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சதா கூறும்போது, “மணிப்பூர் மக்களின் கண்ணீரைத் துடைத்த ‘இண்டியா’ கூட்டணி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கஉறுதியளித்துள்ளது. எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப் போம்’’ என்றார்.

முன்னதாக, மணிப்பூர் ஆளுநரை நேற்று முன்தினம் சந்தித்து தங்களது ஆய்வறிக்கையை வழங்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு, மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டன.

SCROLL FOR NEXT